Pages

Wednesday 9 March 2011

ஓ....சூரியனே ...

ஓ....சூரியனே ...
இளஞ்சூரியனே ....
நீ வாயில் குதப்பிய
வெற்றிலைக் காவியை
இப்படி வானவீதி முழுவதுமா
துப்ப வேண்டும் ......
அதில் மஞ்சள் கலந்திருப்பதென்ன விந்தை ...!
நீ வான நாட்டின் மூத்த பெருந் தந்தை ...! !

ஓ....பகலவனே ...
ஒட்டுத் துணியும் மேனிக்கின்றி
ஒட்டிய வயிறுடன் நாங்கள்
சாலைகளில் தூங்கும்போது ...

நீ
உடுத்தும் துணியும்
நடக்கும் சாலையும் கூட
பட்டுத் துணி உடுத்தியுள்ள
பாரபட்சம் ஏனோ ..?

ஓ ...அந்திக் கதிரவனே ...
நீ ..மலைகளுக்கிடையில் விழுந்து
தற்கொலை செய்துகொண்ட
அந்த நொடிகளுக்கு பிறகு ...
உன் நிலா மனைவி வடிக்கும்
கண்ணீர் ....அந்தோ ...

வானம் முழுதும் சிதறிக்கிடக்கும்
வெள்ளிப் பூக்களாய் ..
வைகறையில்
புல் தாங்கும் பனித்துளிகளாய் ...
மழையாய் ...நதியாய்...கடலாய் ..
பெருகியோடுவதை
கொஞ்சம் தடுத்து நிறுத்தேன் ....!

ஓ ..ஒளி ஞாயிறே ...!

ஆமாம் ..
எனக்கொரு சந்தேகம் ....
எப்போதோ ..எந்த தேசத்திலோ ..
நீ மறைவதே இல்லையாமே ...
ஆனால்
எங்கள் தேசத்தில் மட்டும் ஏன்
இப்போது வரை
எப்போதும்
ஒருமுறை கூட... நீ ....
உதிக்கவேயில்லை ....???

No comments:

Post a Comment